Tuesday, April 27, 2010

மூடிகிடக்கும் கதவுக்குள் காலடிச்சத்தம்


என் கால் நகங்களைப் பார்த்து
உமிழ்நீர் குடிப்பதை நிறுத்திவிடு
நான் இன்னும் எதையும் படித்து கிழித்துவிடவில்லை
முதல் தலைமுறையில்
மூன்றாங்கிலாஸ் படிப்பதே உறுத்துகிறது உன்னை

எமக்காகவே நிர்ணயிக்கப்பட்ட பாடங்கள் ஒதுக்கப்பட்ட சேரிகள்
அறிவியலின் வாசலில் நுழைவுப்போராட்டம்
மந்திரம் ஓதிகளும் அதை கேட்டு தலையாட்டும் மண்டைகளும்
கதவின் தாழ்ப்பாளிட்டு உள்ளே பூசை நடத்துகிறார்கள்
கலை இலக்கியப் படிப்போடு உடைப்போம் கதவை
மிஞ்சும் வலியில் சுவர்கள் உடைபடும்

எண்ணிக்கையற்ற வண்ணங்களில்லாத வண்ணத்துப்பூச்சி
சுற்றித்திரியும் வனாந்தரத்தில்
அம்புகளுடன் அலைமோதும் கால்கள்
வேகத்துடன் பிரவேசிக்கிறது
கால்களுக்கிடையே மிதிபடாமல் பறக்க பழகிக்கொண்டது
ஒருகணம் நெஞ்சில் ஊற்றெடுக்கும் தெனாவட்டு கம்பீரம்

No comments:

Post a Comment