Friday, April 30, 2010

ஓட்ட வாயன் அப்படித்தான் பேசுவான்



கஷ்டப்பட்டு தெரிந்துகொண்ட என் சாதியை
உச்சரிப்பதில் அவ்வளவு கடினம்
மொடக்கு தண்ணி குடிக்கமுடியாமல் மொனவுகிறாய்
வகுப்பறை சுவர்களின் காதுகள்
நீ பேசிய பெரியாரின் சாதி ஒழிப்பு தத்துவத்தில்
கிழிந்து கிடக்கிறது
உன்னை ஏற்க மறுக்கும் அவை
உன் மூஞ்சியில் கொழகொழத்த எச்சிலை துப்பும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
உறவு கலந்திடா வரம் வேண்டும்

Wednesday, April 28, 2010

கும்புடுறன்சாமி



பீக்காட்டுக்கு அவசரமாய்போனாலும்
நின்னு கும்புடுபோட்டுத்தான் போகனும்
மீச வச்ச ஆளு ரொம்ப மரியாதக்காரு

தோளில்போடும் பத்துரூ
பாய் துண்டுக்கு
கொம்பு முளைத்திருக்கும்
எட்டி நின்னாலும் முட்ட பழகிக்கொண்ட மாடு
சங்கு அறுபடாமல் சீண்டுகிறது
மரியாதை இல்லாமல் இருந்துவிடமுடியாது
அவரு மரியாதைக்கு பொறந்தவரு
போடா.. ங்கோத்தா...
ஒன் மருவாதைய தூக்கிப்போட்டு
நாலஞ்சி பேரு ஓத்தான்

Tuesday, April 27, 2010

மூடிகிடக்கும் கதவுக்குள் காலடிச்சத்தம்


என் கால் நகங்களைப் பார்த்து
உமிழ்நீர் குடிப்பதை நிறுத்திவிடு
நான் இன்னும் எதையும் படித்து கிழித்துவிடவில்லை
முதல் தலைமுறையில்
மூன்றாங்கிலாஸ் படிப்பதே உறுத்துகிறது உன்னை

எமக்காகவே நிர்ணயிக்கப்பட்ட பாடங்கள் ஒதுக்கப்பட்ட சேரிகள்
அறிவியலின் வாசலில் நுழைவுப்போராட்டம்
மந்திரம் ஓதிகளும் அதை கேட்டு தலையாட்டும் மண்டைகளும்
கதவின் தாழ்ப்பாளிட்டு உள்ளே பூசை நடத்துகிறார்கள்
கலை இலக்கியப் படிப்போடு உடைப்போம் கதவை
மிஞ்சும் வலியில் சுவர்கள் உடைபடும்

எண்ணிக்கையற்ற வண்ணங்களில்லாத வண்ணத்துப்பூச்சி
சுற்றித்திரியும் வனாந்தரத்தில்
அம்புகளுடன் அலைமோதும் கால்கள்
வேகத்துடன் பிரவேசிக்கிறது
கால்களுக்கிடையே மிதிபடாமல் பறக்க பழகிக்கொண்டது
ஒருகணம் நெஞ்சில் ஊற்றெடுக்கும் தெனாவட்டு கம்பீரம்

Monday, April 26, 2010

நான் எனது அடையாளத்துடன்

கொம்பு முளைத்தவுடன் கெடா முட்டுவதை
வேடிக்கை பார்க்க மறுக்கும் சிறுத்தை
அடுத்த நொடியில் தீர்த்துவிடுகிறது
உன் வேகத்தின் உஷ்ணத்தில் மூட்டப்படும்
தீயில் சுடப்படுகிறது தோலுரிக்கப்பட்ட கெடா

தன்னை மறந்து கிடந்துவிடுகிற சிறுத்தை
முட்டுகிற கெடாவை தடுக்க மறந்துவிடுகிறது
காற்றில் பரவும் வாசணை திரவியம் அரிதாரச்சாயம்
சேரியின் முகவரியை புரட்டிப்போடுவதில்லை
பட்டறையில் காய்ச்சி அடித்தாலும்
வளையும் இரும்பு வெட்டுகிற அரிவாளாகும்
அடிமையை அடிமையன்றோ
சிறுத்தையை சிறுத்தையென்றோ உணரச்செய்

சூரிய வெளிக்கு அப்பால் ஒரு ஆய்வுக்கூடம்

அதிகார ஆண்டையிடம் ஆய்வுச்சாணி வாரி
நிமிர முடியாமல் கிடக்கிறது முதுகு
எப்படி வளைந்ததென்று தெரியாது
சித்திரை வெய்யிலில் அவன்
வீட்டு பழைய புத்தகங்களை
துடைக்கச் சொல்லி ஏவியது தொடக்கமாக இருக்கலாம்
பின்பொருநாள் அவன் மனைவியின்
கையாளாக மாறியது நினைவிலிருக்கிறது
எப்பொழுதும் அப்படி வேர்த்ததில்லை
வாத்தியாரின் அதிகாரத்தில் அவள்
என்னை ஒழுக்கச் சொல்லி ஈர்த்தபோது

பாழ் நிலத்தின் மையத்தில்
கனவொன்றுடன் புறப்பட்டது மனம்
சாணி வார டாக்டர் பட்டம்

வெளியே சொல்லாமல் யாருக்கும் தெரியாது
நான் கூட பீத்திக்கொள்ளலாம்
பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்

Friday, April 23, 2010

ரகசிய கூட்டமொன்றில் திரைமறைவு உரைகள்

ஏற்கனவே அவர்கள் கழுவில் ஏற்றப்பட்டவர்கள்
கூர்முனை செதுக்கப்பட்ட சிலுவையில்
அவர்களை கழுவில் ஏத்திவிட்டு
நாம் மட்டும் கூடி
கொள்ளையடித்ததை பங்குபோட்டுக்கொள்ளலாம்

அப்பத்தை பிட்டு கையில் கொடுத்துவிட்டு
எல்லாவற்றையும் சுருட்டிக்கொள்ளலாம்
ஆலய மணியோசையில் சரணமடையும் அவர்கள்
மண்டியிட்டு கண்மூடும் நொடியில் கடத்திவிடலாம்
காட்டிக்கொடுத்துவிடாது நம் வெள்ளை அங்கிகள்

ஏசுநாதரின் ரத்தத்தைவிட சிலுவையில்
அதிகமாய் சிந்தி கிடக்கிறது அவர்களின் ரத்தம்
நீர் ஊற்றி கழுவிவிடலாம் புனிதப்பூசையின் வாசத்தில்
பல்லை காட்டி நிற்கும் சிலுவை

Thursday, April 22, 2010

சாம்பலின் மணத்தில் வீசும் ரத்தத்தின் நினைவுகள்

தெருமுனையில் கிடந்த கல்லொன்றை
எடுத்து வீசியதில்
இந்த பக்கம் திரும்பவே இல்லை அது
எப்பொழுதாவது பார்த்தால்
பழைய வங்குறுப்பில் குரைக்கும்
ஓடி வந்த வேகத்தில் புட்டத்தை கடித்ததை
வீரமுடன் பேசிக்கொள்கிறது சுற்றத்தின் நடுவில்

கண்ணயரும்போது தீப்பிடித்துவிடுகிறது குடிசை
ஜாட்டுகள் வாலில் எரிகிறது தீப்பந்தம்
ஹரியானாவின் காற்றில் எரிகிற வெப்பம்
நாசியில் நெடியேறும் கருகிச்செத்த பிணங்களின் கோபம்

வஞ்சம் தீர்த்துவிடாமல் அமைதி கொள்ளாத மனம்
கர்ஜித்து எரிகிறது
ஒட்ட நறுக்கப்படும்பொழுது காற்றின் வெப்பம்
குளிர்ந்து வீசும் கோடைக்கால மழைச்சாரல்

துரத்தியபோது
தெருவோரச்சாக்கடையில் விழுந்து புரண்டோடிய அது
வாயில் ரத்தத்துடன் ஓடியது நினைவிருக்கிறது
மரணபயத்துடன் ஓடியதில் எப்படியானதோ
கால் நொண்டி நடக்கிறது

நெருடல்

வேகமாய் நடந்தபோது மறதியால் தொடங்கியது
இன்னும் சுற்றுகிறது காலை
எனக்குள் மாற்றம் ஒன்றை கண்டுவிட்டதில்
விருப்பம்கொள்ளாமல் எரிச்சலடையும் அது
நீட்டுகிறது பொணங்கொத்தி மூக்கை
பார்த்தபோது கும்புடுபோட மறந்துவிட்ட கைகள்
மறுத்து இணைகிறது எதையும் எதிர்க்கும் தெம்பில்

நாங்க அப்படியாக்கும் இப்படியாக்கும்
பழைய புராணத்தில் காலத்தை தள்ளிடும்
பரம்பரை பவுசு விட்டத்தில் குந்தி காலாட்டும்
சோத்துக்கே இல்லாமல் சிங்கியடிக்கும்போது
தலைக்கு ஏறும் சாதிப்பெருமை

மண்டையோட்டில் இழுத்தடிக்கப்பட்ட ஆணி
புடுங்க முடியாமல் கிடக்கிறது
பதுவுசாய் பார்த்துக்கொள்ளட்டும்
அது அவன் பாட்டன் பூட்டனின் சொத்து

தூக்கித்தூக்கி

அவன் மூத்திரம் விட்டதை
ஆண்டையிடம் சொல்லியே தீர வேண்டும்
ரொட்டித்துண்டுகள் வீசப்படாவிட்டாலும்
காட்டிக்கொள்ள வேண்டும் விசுவாசத்தை

பார்த்ததை கேட்டதை எல்லாவற்றையும்
ஒப்பித்துவிட வேண்டும் ஆண்டையிடம்
தன்னந்தனியாய் நடந்துபோனவன்
பத்து பேருக்கு முன்னாள்
திட்டியதாக சொல்லிவிட வேண்டும்
பிராது ஏதுமில்லாமல்
அப்புறம் கோபித்துக்கொள்வார் ஆண்டை

எங்கேயோ ஒருவன் குசுவிட்டதை மூட்டைக்கட்டி
ஆண்டையின் காதில் திணித்திடும் வேகத்தில்
தலையங்கச்செய்தி தெரிந்ததில்
கனத்துக்கிடக்கும் மண்டை

தூக்கிச்சுமப்பனவற்றை இறக்கிவைத்து
முதுகில் சுமக்கும் பாரத்தில்
ஆண்டையின் கரிசனத்தைப் பெற்ற கோள்மூட்டி
உணர மறந்துவிட்ட அடிமை

Wednesday, April 21, 2010

அவர்களின் அதீத மேதாவி தனத்தில் ................

வயித்தெரிச்சலுடன்
எங்களுக்கு ஒன்றுமே தெரியாதென்று புலம்பும்
இந்த சூத்திரர்கள் அதீத மேதாவிகள்
களிமண் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும்
மண்டையை மூடிமறைக்கும் சாமார்த்தியக்காரன்
புறாவின் றெக்கை மிதித்து பறக்கவிடும் வேடன்
எய்திய அம்பை புடுங்கும் திராணியற்று
பட்டறையில் வார்க்கப்பட்ட அறிவுஜீவி

மண்ணோடு சேர்த்தரையப்பட்ட புறாவொன்றை
பறக்கச்சொல்லி வேடிக்கைப் பார்க்கும் அறிவுஜீவிகள்
எப்பொழுது தூக்கிப்போடுவார்கள்
ஏற்கனவே செத்துவிட்ட புறாவை

றெக்கை முளைத்து வானம் வரை பறந்துவிடும்
புறாவின் திசையில் பறக்க பழகிவிட்டன அம்புகள்
இரத்தத்தால் பூசப்பட்டிருக்கும் வேடனின் முகங்கள்
காய்ந்துவிடாமல் பிசுக்கும் சிவப்பூற்று

Tuesday, April 20, 2010

Spreading my words across! காற்றில் பரவும் எனது மொழிகள்

(this poem translated by meera from tamil to english)


Till now I have never got introduced to mike

I am spreading my words all over

For the first time

You cannot expect anything from me

I am not going to say something most special


After such a long time

Without getting permission from the landlords

Even my breath seems to be a special one

What would be there more than this?

I am bowing to him whenever I see him, and

He wanted to see me only for bowing him every time

Spent my whole age as a dead person

My heart could not bear the pain any more

For the first time, I’m standing in front of the mike

Never got a chance to speak even normally,

I do not even know how to handle this mike, but

I know am not going to forget the tears that I have shed


I can smell the fragrance of a nice perfume

Without anyone’s permission

The fragrance that comes from a beautiful flower

Spreading its fragrance for its admirer

Even I worked under this burning sun; there is no willingness to do so

They did not treat me as human being, in fact not even as a living being

He did not get any respect from me though


I made mine as a stone heart thus

He looks like as if he wore a human skin


I can’t show all the pains that I have had

Through this mike which I have not got a chance so far

But I’m sure my sound through this mike

Will reach your ears to open up your mind



இதுவரை எனக்கு அறிமுகமாகாத ஒலிப்பெருக்கி
என் குரலை காற்றில் ஒலிப்பரப்புவது
இதுவே முதல்முறை
நீங்கள் எதையும் என்னிடம் எதிர்பார்த்துவிட முடியாது
பெரிதாக நானும் எதையும் பேசிவிட போவதுமில்லை

ஒரு நீண்ட கால இடைவெளிக்குப்பின்
ஆண்டையிடம் ஒப்புதல் கேட்காமல்
நான் விடும் மூச்சே சுகமானது
இதைவிட வேறேந்தவொன்று
எனக்கு தந்துவிடப்போகிறது சுகத்தை

அவன் பார்க்கும்பொழுதெல்லாம் குனிவதும்
நான் குனிவதற்காகவே அவன் பார்ப்பதும்
செத்தப்பிணமாய் கடத்திவிட்ட காலத்தை
சுமக்க முடியாமல் கனக்கிறது மடி

முதன் முதலாய் ஒரு ஒலிப்பெருக்கியின் முன் நிற்கிறேன்
கையை கட்டி வாயைப்பொத்தியே இருந்தபடியால்
பேசகூட பழகியதில்லை
ஒலிப்பெருக்கியின் மொழி கைவரப்பெறாத நான்
குமுறி அழும் மொழியை
ஒலிப்பெருக்கியொன்றும் மறுக்கப்போவதில்லை

இடைவிடாமல் பரவும் வாசணையொன்றை
என் இஷ்டப்படி சுவாசிக்கும் எனக்கு
யாரிடமும் அனுமதி தேவையில்லை
பூவிலிருந்து பரவும் மணம்
ஒரு ரசிகனுக்காய் வீசிக்கொண்டிருக்கிறது

ஆகாத வெய்யிலில் உழைத்திட்டபோதும்
ஆகாதவனவாய் தள்ளிட்ட எனக்குள்
அவன் ஒன்றும் நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றுவிடவில்லை
மனித ஜாடையில் தெரிகின்ற ஏதோவொன்றுடன்
கல்லாக்கிக்கொண்டேன் மனதை

அத்தனையும் கொட்டி அழுது தீர்த்துவிட முடியாது
இதுவரை எனக்கு கிடைக்கப்பெறாத
இந்த ஒலிப்பெருக்கியின் முன் நின்று
நான் கத்துவது உன் செவிகளில் ஒலிக்கும்

தலித் பேந்தர்

கட்டுக்குள் அடங்காமல் திரியும் இளஞ்சிறுத்தை
திமிரும்வேளையில் யார்யாரின் முகத்திலோ நகக்கீறல்கள்
சிறுத்தையின் குகைக்குள் நரிகள் ஓலமிடுவதில்லை
சேரியின் எரிநெருப்பில்
சீண்டுபவன் செத்தேபோவான்

மௌனத்தை காத்திடாத சிறுத்தைகள் பொறுப்பதில்லை
சிந்திக்கும்வேளையில் மௌனத்தை விடுவதில்லை
அடித்து நொறுக்கிடும் சிறுத்தைகள்
யாருக்கும் அஞ்சுவதில்லை
அப்பாவிகளை சீண்டுவதும் இல்லை

காட்டு மரங்கள் நிறைந்த வனத்தில்
காட்டாறுகள் ஓடும் இந்த மண்ணில்
சிறுத்தைகள் துள்ளி விளையாடும் குழந்தைகள்
பாறாங்கல்லில் படுத்தபடியே பறையொலிக்கு காலாட்டி
மயிலின் ஆட்டத்தை பார்த்திடும் கம்பீர தோரணை

காட்டுச்சேரிக்குள் சிறுத்தைகள் உலவுவதால்
ஊருக்குள் புகுந்துகொண்டது நரிகள்
வீசப்படும் வலைகளை அறுத்து எறியும் சிறுத்தைகள்
ஒருபோதும் மனிதர்களைத் தாக்கியதில்லை

குள்ளநரிகள் குழி பறிக்கும்
சிம்மாசனத்தின் சிறுத்தைகள் அதை தாண்டும்
அடர்த்தியாய் வீசும் காற்றில் பிளவுபடும்
மரத்தின் சத்தத்தை கேட்டு ஓடும் நரிகள்
சிறுத்தைகள் உறுமுகிறது


Monday, April 19, 2010

இறக்கிவைக்கப்பட்ட சிலுவை சுமக்கும் இவர்கள் ஏசுபிரான் அல்ல



சாதித்திமிரோடு பாதிரியார் நடந்தால் போட்டுத்தள்ளிடு
கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டுவிடலாம்
மறுத்தால் கர்த்தருக்கும் தலை இருக்காது

ஒடுக்கும் வெள்ளையனின் உறவை முறித்திட
கிருஸ்துவத்தை துறந்து
மதம் மாறினான் மால்கம் எக்ஸ்
நாய்கள் துரத்துவதினால்
உன் கிறிஸ்துவக்குழிக்குள் பதுங்கிவிட்டோம்
மன்னித்துவிடுகிறோம்
எங்களை காட்டிக்கொடுத்த ஏசுபிரானை

அப்பத்தையும் ரசத்தையும் காட்டி ஏமாற்றிவிட்டு
தூரத்தில் போகும் அந்த ஒளி யாருடையது
செத்தவன் உயிர் பிழைத்திருக்கக்கூடும்

சிலுவையில் அறையப்பட்டவன்
பாரம் சுமக்க முடியாமல்
சேரியின் முதுகில் இறக்கிவைத்திருக்கிறான்
அவன் ஓய்வெடுக்கும் வரை
முதுகு வளைந்து கிடக்கும்

கடவுள் உன்னை ரட்சிப்பாராக

மண்டியிட்டு முறையிடு
கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்
அவருக்கு அதுதான் வேல

பாவமன்னிப்பு கேட்டு
பாதிரியாரிடம் முறையிடலாம்
அவனுக்கு வேற என்ன வேல

வெள்ளை அங்கியில் கர்த்தரின் புனிதன்
ரொம்ப நல்லவரு
சாதி மட்டும் பார்ப்பான்...

சாதியின் கூட்டத்தை ஒட்டுக்கச் சேர்த்து
எலி வலை நோண்டும் பாதிரியார்
கெட்டிக்காரத்தனமாய் ஆசிர்வதிக்கும்
அதீத பண்புகொண்ட கர்த்தரின் விசுவாசி

போ பறையா நீ வீணாக கடவாய்
செரிக்காமல் கிடக்கும் பாதிரியாரை
கர்த்தர் லெக் பீசோடு ஆசிர்வதிப்பார்

பிராமணீயம் என்கிற சூத்தரியம்

வெறும் வெற்று வார்த்தைகளை விரித்திட்ட உன்னை
இது கூட மதிக்கப்போவதில்லை
உன்னால் உருவாக்கப்பட்டதுதான் சூத்தரியம்
எல்லாவற்றிற்கும் அதுதான் காரணம்
நீ மட்டும் விரல் சூப்புகிறாய்


தனித்தே இருக்கும் என்னை
நீ விடுவதாகவே இல்லை
பெரிதாக உன்னிடம் எதையும்
நான் கேட்டுவிடப்போவதுமில்லை
குறைந்தபட்ச கோரிக்கைதான்
என் இடுப்பில் கைவைத்து
உருவுவதை மட்டும் நிறுத்திவிடு


பார்வையாளர்களை குருடாக்கும்
தொடரும் உன் நாடகத்தனம்
செவிகள் புளித்திடும் வசனம்
மௌனமாய் நகரும் நாட்கள்
அறுத்துப்போடும் உன் சூத்தரியத்தை

Friday, April 16, 2010

எல்லைத்தெய்வம்



ரோகினி
நதியிலிருந்து பெருக்கெடுத்த வெள்ளம்
நிலப்பரப்பு
முழுவதும் ஈரப்பசையை பரப்பி
மனங்களில்
வளர்ந்து கிடக்கும் பசுமை
அர்த்த
ராத்திரியில் திருட்டுத்தனமாய் அறுத்துவிட்ட கதிர்கள்
கைபர்கணவாய் வழியாய் வந்த கூட்டம்
கொல்லையடித்துவிட்டதை
பேசிக்கொள்கிறார்கள்
முச்சந்தியில்
கூடும் சேரிக்காரர்கள்
கொட்டிவிட்ட நெல்மணிகளை
பொறுக்கும்போது
அறுத்துவிடுகிறது காய்ந்து கிடக்கும் வயக்காட்டு வெடிப்புகள் யாரிடமிருந்தும் எங்களை பாதுகாத்துக்கொள்ளும்உன்னை வடக்கு பார்த்தே வைப்போம்
கொல்லைக்கூட்டங்களை
எதிர்கொள்ளும் காவக்காரச்சாமி

சுவடுகளில் தடம் பதியும்







புத்தியுரைத்திட்ட
உன்னை கூட
மாத்தியுரைத்திட்ட
பாவிகள்
ராத்திரியோடு ராத்திரியாக
எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள்
எதைக்கண்டாலும்

பட்டையையும் நாமத்தையும் போட்டவர்கள்
அதை
எல்லோருக்கும் போட்டுவிட்டார்கள்

மிஞ்சிய
எச்சம் கூட
நாங்கள்
நூல்பிடித்து நகரும் துருப்புச்சீட்டு
வெட்டுகிற
இடத்திலெல்லாம் தட்டுப்படும் உன் தலைகள்
அரசில்லத்திலெல்லாம் உன் உருவச்சிலைகள்
புத்த
தேசத்தின் கைக்குழந்தைகள் நாங்கள்
கோய்ந்தா
போட மட்டும்
எங்களை வளைத்து போட்ட கூட்டங்களிலிருந்து
தப்பிக்கமுடியாமல் தவிக்கிறது என் சமூகம்
இரட்சிக்க
வந்தவன் சான்றிதழ் கேட்டு
ஆசிர்வதிக்க
கூட மறந்துவிட்டான்

தொன்மை
காலத்திலிருந்து தொடரும் வாழ்க்கை
உன்
நினைவுகளில் கரைகிறது
உன்
அடையாளங்களை கண்டபடியே
தடம் தேடி பதியும் எங்களை துரத்துகிறதுதூரத்திலிருந்து கேட்கும் கொரைக்கும் சத்தம்

மரணக்குறிப்பேட்டின் பக்கங்களிலிருந்து

நீங்கள் கக்கிவிடும் விசத்திற்கு
மருந்திடும் எங்கள் போராட்டங்களை ஊனப்படுத்தும்
உங்கள் துப்பாக்கியிலிருந்து கிளம்பிய
தோட்டாக்களைவிட வலிமையானது
என் துப்பாக்கியிலிருந்து சிதறி
உங்கள் வாயை கிழிக்கும் என் தோட்டாக்கள்

மனித நேயத்தை அறிந்திடாத உன் தோட்டாக்கள்
எங்கள் மீது மட்டும்
எளிமையாக பாய்ந்துவிடும் பொச்சரிப்புபோறாம்பு
நீளும் உன் கைகளை முறிக்கும் என் கைகள்
என் அசைவுகள் உன்னை அச்சுறுத்தும்

எதற்கும் எச்சரிக்கையாகவே இரு
வானத்திலிருந்து உதிரும் வால்நட்சத்திரம்
உன் வாயின் வாசல் தேடி நுழையும்
உன் தோட்டாக்கள் சிதைத்துவிட்ட உடல்கள்
மரணக்குறிப்பின் பக்கங்களில்
ஊர் முனையில் அரிவாளோடு நிற்கும் கொலச்சாமி

Wednesday, April 14, 2010

பழமையான பல்கலைக்கழகத்தில் மனித நேயமிக்க அவருக்குப் பெயர் வாத்தி

எப்படியாவது இந்த ஆண்டும் நாலைந்து
அடிமைகளை உருவாக்கிவிடலாம்
ஆய்வேட்டை அப்புறம் எழுதிக்கொள்ளலாம்
அடிமையாய் இருக்க கற்றுக்கொள்ளட்டும் அவன்
ஆண்டை மனோபாவத்துடன் இருந்துவிடலாம்
கேட்பதற்கு எவனும் இல்லை
எவன் கேட்டுவிடபோகிறான்
வாயைக்கூட திறக்கமாட்டான் துணைவேந்தன்
தூரத்து சாதிச்சொந்தம்

சுடுமூஞ்சியாய் சிடுத்தால் போதும்
பையன் பக்கத்தில் வருவதற்கே பயப்படுவான்
அந்த மெதப்புல ஓட்டிவிடலாம் எல்லா நாட்களையும்

எதிரும் புதிருமாய் எவனாவது பேசட்டுமே
ஆய்வேட்டில் கையெழுத்து போடாமலே கடத்திவிடலாம் காலத்தை
கொம்பு முளைத்துவிட்ட கைடுகளுக்கு
முட்டுவதற்கு சுவரில்லாமல் முட்டும்
இந்த பல்கலைக்கழகத்திலும்
மிருகக்காட்சி பூங்காவொன்றை கட்டுங்கள்
நாளைய தலைமுறை நிமிரும் குறியீடுகள் அவை

சேர்க்கையின்போதே
பார்த்து பார்த்து சேர்த்துவிட்டால்போதும்கால்களைச்சுற்றும் நாய் அவன்

எனக்கு கீழவும் இத்தனை ஆய்வுகள்
இவை யாவையும்
நான் சார்ந்திருக்கும் ஒன்றிற்காக உருவாக்கப்பட்டவை
எனக்கு எதிராக ஒன்றும் உருவாக்கப்படாதவை
எனக்கு அவன தெரியும் இவன தெரியும்
என்னை மீறி எதுவும் நடந்துவிடாது

கழுதையின் முகமும் கழுகின் மூக்கும்
நிறைந்த மனிதஜென்மத்தால் உருவாக்கப்படும்
அடிமைகள் சமூகத்தின் ஆணிவேர்கள்


மண் பிளந்து நுழையும் வேர்கள்

மரணம் தொரத்துவதும் மரணத்தை தொரத்துவதும்
சுழலும் வாழ்க்கைக்கு புளித்துப்போய்விட்டது
அந்தரத்தில் தொங்கியபடியே
மல்லாக்க விழுந்து புரண்டு குப்புரக்கிடக்கும்
கரப்பான் பூச்சியின் மீசை மசுறில்
மண் எதுவும் ஒட்டிவிடாத சாதிப்பெருமை
குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையோட்டி
பழகிவிட்ட வாழ்க்கைக்கு பலியாக்கப்படும்
மனித ஜீவன்கள்
அவர்களின் மூளையைச்சுற்றி பின்னியுள்ளஇரும்பு கம்பிகள் அதிகச்சூட்டில் உருக்கப்படும்
விரியும் சிந்தனை கம்பிகள் நொறுங்கும்
அப்பொழுது ராட்சச மிருகமொன்று அமிக்கி வாசிக்கும்

Tuesday, April 13, 2010

கருக்கலின் நீளத்தில் நிகழ்ந்து முடிந்துவிடும் அவை

தொடமுடியா வானம் பறிகொடுத்த நட்சத்திரங்களை
பிடுங்கும் முன் உன் கண்களை மூடிய என் கைவிரல்கள்
உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை
இரத்தத்தின் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்
உன் ஆர்ப்பரிக்கும் உதடு
தொட்டதை விடாதபடி
என் இடுப்பை இறுக்கி அணைக்கும் உன் கைகள்
ஆறடி பள்ளத்துக்குள்ளும் ஆடை களைந்த உன்னை
நிலவு பார்த்திடாதபடி போர்த்திய என் உடல்
உன் முடிகளை கோதியபடியும் இறுக்கி பிடித்தபடியும்
தடுமாறாமல் தடம்மாறாமல்
உன் உதட்டை அழுத்தி முத்தமிடும் என் உதடு
துடிப்பின் உச்சத்தில் பின்னும் நம் கால்கள்
எந்த தடையுமற்று என்
இரத்தத்துளிகளை சுகமாய் பெற்று
நீ விடும் பெரும் மூச்சு
தடைகளற்ற புணர்ச்சியில் தடையிடும் சாதி
மரணமுறும் நாட்கள் நெடுந்தொலைவிலில்லை
அப்பொழுது பசுமையின் வார்ப்பில்
நாம் புனிதப்பட்டுக்கொள்வதற்கு ஏதும் இல்லை

Friday, April 9, 2010

ஆய்வேட்டில் குறிக்கப்படாத ஆய்வுக்காலங்கள்

எதற்கும் கவலைப்பட வேண்டாம்
சிலிண்டர் தீர்ந்துவிட்டால் தூக்கிச் சுமப்பதற்கு
ஆய்வாளன் இருக்கிறான்
அனுப்பவேண்டிய கடிதங்களுக்கு அவனே தபால்தூக்கியாவான்
அதிகாலையில் பால்போடும் பால்காரனும் அவனே
அந்தியிலும் போட மறுப்பதில்லை
மின்சார கட்டணத்தின் தேதியை வாத்தியான் மறந்திருப்பினும்
மறக்கப்போவதில்லை அவன் மூளையில் குறிக்கப்பட்ட பதிவுகள்

வழிகாட்டியைப் பார்த்தவுடன் நெலியும் ஆய்வாளப்புழு அவன்
எப்படி ஆட்ட வேண்டுமென்பதை தெரிந்திருந்த குரங்கு வித்தைக்காரனவன் ராப்பொழுது பாராமல் எந்த வேலையும் வாங்கிவிடலாம்
ஆய்வாளன் பேரில் பதிவு செய்யப்பட்ட்ட அடிமையவன்

தேவையான இடத்தில் கையொப்பமிடுவதற்கு
பீத்திக்கொள்ளும் வழிகாட்டி
அவனை முந்தானையிலே முடித்துக்கொள்ளு(ல்லு)ம் காரியதரிசி
தொட்ட தொண்ணூறுக்கும் அவன் ஓட வேண்டும்
வாத்தியார் வரும் முன் சென்று கதவை திறக்க வேண்டும்
நேர்த்தியாக செய்து முடித்திட்ட வேலையில்
பிசகாக ஏற்பட்ட கொஞ்சம் குறைக்கும்
நெஞ்சம் பொறுத்து வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும்
அடிமையின் வாசம் மறந்து
ஆய்வுக்காலம் முடியும் அந்த ஒற்றைப்புள்ளியை
மங்கிபோய் பார்க்கும் அவனது கண்கள்
அப்பொழுது எல்லாவற்றிற்கும் பழக்கப்பட்ட
செக்குமாடாய் சுழலும்

ஒன்றன் மீது ஒன்றாய்

உடலசைவின் மொழிகளை அதன் பொருளை
பொத்தி காக்கும் இந்த மண்ணில்
கால்களை நீட்டவோ மடக்கவோ குறுக்கவோ முடியாமல்
தவிக்கிறது கால்களும் மனமும்
கால் மேல் கால் போடும் காட்சியை ஏறெடுத்து பார்க்கும் கண்கள்
மொறைத்துப் பார்க்கும் பூசணிக்காயில் வரையப்பட்ட பொம்மை
தேவையற்று உன்னை மிதிக்கவோ உதைக்கவோ உரிமையற்ற கால்கள்
சலனமின்றி அதன் மீது அது ஏறி கிடக்கும்
முள்ளின் தடத்தில் பூக்களின் பாதையில்
எனக்காக நடக்கும் என் கால்கள்
ஒருபோதும் எனக்காக மாரடிக்கப்படாத உன் கால்கள்

Wednesday, April 7, 2010

பெரிய பல்கலைக்கழகமொன்றில் அவன் சிரத்தையான ஆய்வாளன்



அடிமையாய் வாழ்ந்துவிட்ட அம்மாவுக்கு தெரியப்போவதில்லை
பட்டணத்துக்கல்லூரியில் ஆய்வு செய்யும் மகன்
வாத்தியின் பையை தூக்கியும்
இடைவேளையிலும் தேவைப்படும்போதும் டீ வடை ஏந்தி
விசுவாசமான அடிமையாய் நடந்துகொள்வதும்

ஆய்வு காலங்களில் வாத்தியின் பையை தூக்கினால்போதும்
வழிகாட்டுதல் பேரில் கொன்றுவிடும்
மனிதநேயமிக்க அதுகள் வாத்தி

வாத்தி வீட்டு வேலை முடிந்து களைப்பாறும் முன்
ஆய்வு காலம் கடந்துவிடும்
அடுத்து வரும் காலங்கள் கண்டபடி கொரைக்கும்

நல்ல அடிமை சிக்கியதில் மெதப்போடு அவனும்
தன்னை பீத்திக்கொள்ளும் சுயபுராணக்காரன்
சோம்பேறியாய் சுத்திவிட்டு
ஆய்வாளன் சேகரிப்பின் தரவுகளை கைப்பற்றியபடி
எழுதும் கட்டுரைகள் அவனின் ரத்தத்தை சுரண்டும்
ஏதோ ஒரு மூலையில் நன்றியுடன் குறிக்கப்படும்
அவனின் பெயருக்குப்பின்னால் ஒளிந்திருக்கும்
நூலகத்தில் அவன் புரட்டிய புத்தகத்திலிருந்து
அவன் மூக்கிலேரிய நெடி

ஆய்வாளன் பேரில் ஒரு அடிமையும்
வழிகாட்டி போர்வையில் மனித ரத்தத்தைச் சுரண்டும் ஒரு மிருகமும்
வாழ்ந்து முடிந்துவிடும் நாட்கள்
அவனின் குறிப்பேடுகளில் பதிக்கப்படும் அடிமைக்காலம்

எதுவுமே தெரிய வேண்டாம் அம்மாவிற்கு
அவனும் இங்கு சாணியை வாருகிறான்

அடைகாக்கப்படும் என் மௌனம் உடைக்கப்படுகிறது உன்னால்


காத்தவராயன் கையில் கத்தி பார்த்து பழகி
என்னை மிதிக்கும் உன் கொட்டங்களின்
வாலை ஒட்ட அறுத்து தொரத்தும் என் துடிப்பு
நாளை வரைக்கும் பாதுகாக்கப்படும்
வெட்டிய வால் முளைவிடாதபடி
இறுக்கி அடிக்கப்படும் ஆப்பு
என் அமைதியை சீர்குலைக்கும் நீ
மறந்துவிடுகிறாய் எனக்கும் கொஞ்சம் கோபம் வரும்
என் மௌனத்தை உடைப்பதில் நீயும்
உன் வாயை உடைப்பதில் நானும்
தள்ளிவிடுகிறோம் நம் காலத்தை
நானுண்டு என் வேலையுண்டு என்றபடியே நகரும்
என் நாட்களை கொத்தித்தின்னும் நீ
என்னித ஏன்டா புடிச்சி உருவுற

வெறும் கிறுக்கல்கள்

வண்ணம் தீட்டப்படாத அந்த வெள்ளை ஏடுகளில்
எதை கிறுக்கினாலும் எதையோ பெருசா எழுதி கிழித்ததாக
மூன்றாந்தெருவுக்கு கடிதாசியை சுமக்கும் அவளுக்கு
எல்லாவற்றைவிடவும் வெத்துத்தாள்களில் கைநாட்டிடநன்றாகவே கற்பித்திருந்தான் மூப்பநூர் பண்ணை
கிழிந்து போன சேலைகளுக்கிடையில்
சிக்கித்தவிக்கும் அவள் காலங்களையும்
கன்னக்கோல் வைத்தான் வாண்டையூர் பண்ணை
எதை பெரியதாக எழுதி கிழித்துவிட முடியும்
வெறும் வெற்றுக்கிறுக்கல்கள் அவை
காமநகங்கள் முதுகில் கீறவும்
வைக்கோலில் தள்ளி முட்டி தூக்கி
பண்ணையின் கொட்டையில் எட்டி உதைத்ததும்
அவன் அலறலின் சத்தத்தில் மொளக்குச்சியை
புடிங்கி ஓடும் மாடு
இன்னவும் இன்னபிறவும் கிறுக்கப்படாதஇந்த கடிதாசியில் எதுவுமே இல்லை

Monday, April 5, 2010

மீட்கப்படும் வரலாற்றில்..................




மீட்கப்படும் வரலாற்றில்..................

பழைய நெனப்பு

மேலைக்காற்றின் வாசணையில்
சுவாசம்பெறும் மூச்சுக்குழல்
உள்ளூரின்
சாதி நாற்றத்தையும் சுவாசிக்கிறது
அடிக்கடி மூச்சு நின்றுவிடுகிறது
தூர்வாறும் முயற்சியில் சந்தித்துக்கொள்ளும்
நம் மூச்சுக்காற்று மூச்சுத்திணறி சாகிறது
அயர்ந்து மயங்கிய உனக்கு
இப்படி வேர்த்திருக்கக்கூடாது
வேர்த்து நனைந்து போன நானும்
உன் மீது அப்படியே சாய்ந்திருக்கக்கூடாது

சல்லடையின் மறு பெயர் நீ.........

ராத்திரியின் கதகதப்பு
என் அக்குலின் வாசணை
நெற்றியின் வியர்வை எல்லாம் பிடித்து போன உனக்கு
என் நகம் பட்டு உன் முலை நுனினில் விழுந்த கீறல்
பனி காலத்தின் குளிர் என்றாய்
சேரியின் இருப்பு மட்டும் தொட்டுவிடமுடியாத
நெருப்பு என்றால்
என்னை சேரியிலிருந்து
பிரித்து எடுக்கும் வன்முறையை எப்படி கற்றுகொண்டாய்

குண்டு வாத்தியார்

அடிவானத்தில் பறக்கும் விமானத்தை
துள்ளிப்பிடித்த சுகம்
பல்பத்தை தொலைத்து
பேனாவை பிடித்த போது !
எல்லாமே மண்ணோடு மக்கிபோகும்
வெள்ளையும் சொல்லையும்
பேருக்காய் வாத்தியாய்ப்போன
தூங்கு மூஞ்சி சொல்லும்
"பறையனுக்கு பொறந்தது
என்னமா படிக்குது!"

உங்கள் தடம் படாத கந்தக பூமி

நான் சுற்றித் திரிந்த பூமி
என் கைக்குள் அடக்க நினைத்த வானம்
இந்த குறுகிய சந்துக்குள்தான்
ஏதோ ஒரு மூலையில் நீ முடங்கி கிடக்கிறாய்
நீ இருக்கும் அந்த பாலைவனத்தின்
இந்த புறம் கண்சிமிட்ட முடியாத பூச்சோலை
வரலாற்றில் அது சேரியாய் போனது
நான் பிரமித்து நடக்கும் இந்த சேரிமண்
ரத்த உறவின் கதைகளைச் சொல்லும்
அதுக்குள் வெந்து புழுங்கும்
ரத்தக்கசிவின் பாடல்களை முனுங்கும்
வாய் கதறி அழும்
அடிமைகளின் வரலாற்றை சொல்லும்
இந்த வெப்பத்தின் மீதே இந்த பூச்சோலை
வானத்தை நோக்கி எரிகிறது !

எனக்காக வக்காலத்து வாங்கும் உன் குரல்

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
வேர்த்துக்கொட்டிய எங்கள் வியர்வைகள்
உன் நிலத்தில்தான் விளைந்து கிடக்கிறது
இடுப்பில் கட்டிய
அறுநாக்கயிரையும்உருவிக்கொண்டு
நாங்கள் முண்டமாய் திரிவதாய்
நீ மாநாடு போடுகிறாய்
"செத்தவன் சுன்னி
கெழக்க கெடந்தா என்ன
மேற்க கெடந்தா என்ன"

பூசி மெழுகப்பட்ட எங்கள் வசந்தம்




அசோக வனத்தின் ஒத்தையடிப் பாதையில்

தடத்தை மறைத்த
காய்ந்த சருகின் மீது உதிர்ந்த
நீலநிற இலைகளின் மீதே
மனம் அசைபோட்டு நடக்கிறது
வனம் நிறைந்த புத்தர் சிலைகள்
மஞ்சள் குங்குமம் பூசப்பட்டு
சாம்பல் கூட அப்பப்பட்டு
ஏதும் அறியாத அப்பாவி குழந்தையாய்
விக்கி அழுகிறது
வனம் நிறைந்த சத்தம்
உன் மலட்டுச் செவியில் கேட்கப்போவதில்லை
மூத்திரம் போகும் நேரத்தில்
காதில் சுற்றிக்கொள்ளும்
பூநூலிடமிருந்து அறுபட்டுபோகாமல்
உன் காதை பத்திரமாகப் பார்த்துக்கொள்
இந்த தேசத்திற்கு
மலட்டுச் செவியின்
அடையாளச் சின்னம் தேவைப்படுகிறது !

எல்லா வடிவமுமாய்

தீண்டாமையை கடைபிடிப்பதாகவே
பத்தடி தூரம் தள்ளி நின்றால் போதும்
கிட்ட வந்து மேல கைய போட்டு
காலை வார நினைக்கும் உன்னிடமிருந்து
நான் தப்பித்துக்கொள்ள பெரும்வாய்ப்பு
குனிந்து வாரும் நொடியில் உன் முதுகை
ஏறி மிதிக்கும் என் கால்கள்
கை குலுக்கள் தாயின் அரவணைப்பு
சொந்தத்தின் பாசம் எல்லாம் பார்த்து பழகிப்போன
எனக்கு அரளிக்கொட்டையின் வாசம்
உன்னை பார்த்து நன்கு தெரியும்
எல்லா முனைகளிலும் உன் நினைவு
என்னை கவிழ்க்கும் சதித்திட்டம்

இட ஒதுக்கீடு எங்கள் பங்கீடு

எம் மண்ணில் எம் பங்கீட்டை தர மறுக்கும்
ஆச்சார்யா நீ செத்து பொணம் போகும் நாள்
எங்களாலேயே தீர்மானிக்கப்படும்
பல்கலைக்கழக வளாகத்தில் வெடித்து கிளம்பிய
பறையின் அதிர்வு சாவுச்சத்தத்தின் பிறம்படி
பழைய பேன்ட், சட்டைக்குள் புகுந்துக்கொண்ட
பட்டாச்சார்யாவை பிணஊர்வலமாய் தூக்கிச் செல்ல
அவன் துணை வேந்தன் திமிரோடு
அவன் பிணத்தை அவனே பார்த்தான்
ஊர்வலத்தின் முடிவில் நாயின் பிணத்தை
பெட்ரோல் ஊற்றி கொளுத்தி
நெருப்பாய் நடந்த நாங்கள்
இன்னும் நெடுந்தூரம் நடக்க வேண்டியதும்
சமுக நீதியை கொள்ளுகிற நாய்களின் சவத்துக்கு
பாடை கட்டுவதுமாய் நகர்கிறது நாட்கள்

Saturday, April 3, 2010

aazhaththai thedi paravum verkal



அரசமர பள்ளிக்கூடத்தில்

உன்னிடம் பாடம் கேட்டுவளர்ந்த குழந்தைகள்
சுவாசத்திற்காக கார்பன் -டை -ஆக்சைடு
அடைத்து வைக்கப்பட்ட கூடாரத்தில்
நினைவுகளற்று செத்தப்பிணங்களாய் உறங்குகின்றன
மூச்சு முட்டும் நெஞ்சடைத்து கண்கள் மிரளும்
ஆக்சிஜன் கேட்டு துடிக்கும் வாய்களுக்கு
அரசமரத்திலிருந்து உதிரும்
இலை ஒன்று அதிர்ந்து பரவும்
அந்த கூடாரத்தின் சல்லடை ஓட்டைகளில்
நீர்கொண்டு நிரப்பும்
உடைக்கப்படும் அந்த கூடாரத்தில்
அரசஞ்செடி குருத்து வேண்டி
பறவைகள் எச்சமிடும்
இன்னும் ஆக்சிஜன் கேட்டு அலைகிறது மூச்சுக்குழல்

மீட்கப்படும் என் பூர்வ வரலாறு




பெரும்புதருக்குள் சிக்கிக்கொண்ட

உன்னை மீட்பதெப்படி
முள்ளில் சிக்கிக்கொள்ளாதபடி
நகரும் என் கைகள்
இறைச்சியை புறந்தள்ளி அதன் ரத்தத்தில் உருவான
நெய் வாசணையோடு வெப்பக் காற்றின் கரங்கள்
முதுகில் தட்டி முள்ளுக்குள் என்னையும் தள்ளி
இன்னொரு கொலை முயற்சி
காயம்பட்ட வலியோடு அவனோடு கைகோர்க்கிறேன்
உறைந்து காய்ந்த அவன் ரத்தம் உறைகின்ற என் ரத்தம்
சந்திக்கும் நொடி மூச்சுக்குழல் நின்று தொடங்கும்
அந்த அடர்ந்த முட்புதருக்குள்
எனக்கும் முன்பாக தள்ளிவிடப்பட்டவன் அவன்
அவனை மீட்பதில் எனக்கும் என்னை மீட்பதில்
அவனுக்கும் ஒரு பரஸ்பர உடன்பாடு
பழி வாங்கும் குணமற்று
கொடியவனின் எலும்பை முறிக்கும் தத்துவத்தை மட்டும்
அவன் மூளையின் சேகரிப்பில்
அகராதிகளில் நிரம்பியிருக்கும் வார்த்தைகளாய்
அடுக்குத்தேன் போல சொல்ல முடியா சுவையுடன்
ஈரம் படர்ந்த காற்றில் பரவுகிறது

மறுத்துப்போன தேகம்

என் கண்ணிற்குப் பார்வையைத் தரும் அந்த
வெளிச்சத்தை கண் சிமிட்டாமல் பார்க்கிறேன்
ஒத்தையடிப்பாதையை செம்மண்சாலையை
தார்ரோட்டை தேசிய நெடுவழிச்சாலையை
ஏரிக்கரை சுற்றியிருக்க நடுவில் சிக்கிக்கொண்ட
என் ஊரிலிருந்து விரியும் சாதி தொழில்நுட்பமற்று
எல்லாரையும் இணைத்து
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே வைத்திருக்கிறது
கோடை வெய்யிலில் மூச்சிறைத்த வெறிப்பிடித்த நாய்
எலும்புத்துண்டை கடிக்கும் நெனப்பில்
மேலிருந்து சொரவானமடிக்கும் வெப்ப ஒளியை
கவ்வி சாகும்போது என் முப்பாட்டி
அவள் ரத்தத்தில் ஊறிய ஒப்பாரியையும் மறந்திருப்பாள்

சுண்டி இழுக்கும் காயங்கள்

தவறிவிழுந்துவிட்ட குழந்தையின் முதுகில்
ஆற்றை கடக்கும் முதலை
கரையில் மல்லாந்து கிடந்தே இளைப்பாறுகிறது
நகம் புறண்டி வழப்பறிந்த முதுகில் வடியும் ரத்தம்
தாய்ப்பால் வாசம் கலந்தே வீசுகிறது
அழுது புலம்ப முடியாமல் எறவானத்தில்
தொங்கும் யானையில் மூச்சடைத்து கிடக்கும்
அந்த குழந்தைக்கு
இனி பறைச்சியின் தாலாட்டு தேவையில்லை
நூற்றாண்டு கணக்கில் ஒப்பாரியோடு மாரடித்து
ஓய்ந்த அவளும் மாரில் பால்கட்டி திணறுகிறாள்
அடுத்த சந்ததி முதலையின் முதுகில்
ஆற்றை கடக்கும் நினைப்போடு
மொதல கூட்டங்களுக்கு மத்தியில்
நீச்சல் பழகும் அவள்
ஓசியில் கிடைத்த நவாப்பழம்
உனக்கும் ஆகாது உன் ................... உதவாது
வெட்டி உருவப்படும் உன் குடல் ஈரல்
நாளை அந்த ஆலமரத்தில் தொங்கியவாறே
பழைய கதையை மாற்றிச் சொல்லும்
வேரடி மண்ணோடு மண்ணாக "புடுங்கி" எறியும்
மெதப்பில் கங்கணத்தோடு மனித முதுகை கீறியே
அந்த வனத்துக்குள் திரியும் கொம்புமனிதன்
மிருக கூட்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து பழகிவிட்டான்
பழைய நினைப்பில் நானும் வேட்டையாடியபோது
என் வீட்டின் சுவர்களை கொம்புகள் அலங்கரிக்கின்றன

ஒரு பாழ்(லை) நிலம்

எலும்புகளின் முரண் குறியீட்டிற்குப்பின்
ஒளிந்திருக்கும் அந்த மண்டையோடுதான்
அரசுகட்டிலை இத்தனை நாள் குந்தி தேய்க்கிறது
முன்பொருகாலத்தில் அது
மொழி உணர்ச்சியை கிளப்பிய பிண்டம்
சொந்தமெல்லாம் நீலநீருக்கு அப்பால் செத்துமடிய
வாய்க்கட்டுப்போடாத இன்னும் செத்துமடியா பொணம் அது
மனித ரத்தத்தை உறிஞ்சும் அபாயக்குறியீடு
அடுத்த தலைமுறை பீப்பேண்டு தொடைக்கும் கல்
கடந்து வந்த பாதையை நாறடிச்சு தலைமைப் பண்பில்லாத
தலையில்லா முண்டம் அது
குந்தி தேய்த்து குசுவிட்டது போதாதென்று
எலிக்குஞ்சியை முன்னுக்கிழுக்கும் கடும்முயற்சியில்
பசுமை நிறைந்த மண்ணில்
மலட்டு விதையைத் தூவிய நெஞ்சழுத்தம்
மந்திரவாதியிடம் சிக்கிய மண்டையோடு போல்
பாதுகாப்புப் படைகளுடன் சொரணையற்று கிடக்கும் உனக்கு
தெரியப்போவதில்லை ரத்தத்தின் வாடையும்
பிணங்களின் கவிச்சையும்
உன் போலித்தன்மையில் மயங்கி கிடக்கும்
இந்த மொழிச்சமூகம்

இன்னும் சொல்ல வேண்டிய கதைகள்

அறுத்து மாளாமல் எரவானத்தில் சொருவப்பட்ட அறுவாள்
அறக்கப் பறக்க அலறியடித்து எழும்
அவள் கண்ணுக்குள் சொருகி கிடக்கும்
நேத்தைய பொழப்பே வழ்க்கையாய்ப்போன கிழவிக்கு
அடுப்பங்கரையில் படுத்துறங்கும் பூனையை துரத்தும் தெம்புமற்று
கொசவானத்தில் சொருகிய அரிவாளோடு எட்டி நடைபோடும்
வேகத்தில் பின்னுக்குத்தள்ளப்படும் சேரியின் குடிசை
பொசாயப்பொழுதில் மூன்றாம் நாள் ஆக்கி வைத்த
கம்மங்கட்டியில் நாளைக்கு ஒதுக்கி வைக்கும் கிழவியின் லாவகம்
அவள் கரைத்து குடிக்கும் கூழோடுக் கரைந்துப்போகும் அவளது காலம்
இருட்டிகிடக்கும் ராத்திரியை உறங்க வைக்க அவள் சொல்லும் கதை
ஒரு ஊருல ஒரு பண்ணையார்
அவன் வீட்டு அடுப்பில்
ஒரு கிழவியின் சாண்டு வடியும்

கூத்துக்கும் பின்புறம்


ஓங்கி அரைந்ததில் குழம்பிப்போன உனக்கு
இன்னும் தெளிந்திருக்க வாய்ப்பில்லை
கீத்தை விலக்கி நுழையும் முகங்களில் நானும்
அரிதாரத்தை அப்பிப்பூசி ராஜ நினைப்பில் மையிடும்
கடங்காரக் கூத்துக்காரனை நோட்டமிடும் என் பார்வையும்
முட்டிக்கு கீழே தொங்கும் என் தந்தையின் முழுச்சட்டைக்குள்
அடைந்து கிடக்கும் என் உடலும்
முட்டிக்கும் மேல் மடித்துக்கட்டிய என் கைலியும்
சித்திர விழாவை மெருகூட்டும் உயிர்ப்பொம்மை
என்னை மட்டும் தடுக்கும் உன் கரங்களில் பூட்டப்பட்ட
சாதிவிலங்கு என் முகத்திற்கு திரையிடும்
கொடிய நினைப்பை முறிக்கும்
கட்டியங்காரனின் சலங்கை சத்தத்தில்
யாருக்கும் கேட்டிடாத எனது அரையை
உன் மீசையை முறுக்கியவாறே மறைத்துப் போ

தொடரும் குளிரில் வெப்பம் மூட்ட முனையும் காய்ந்த சருகுகள்

நீர் சலசலத்து நுரையை கரை ஒதுக்கும் ஆற்றங்கரையில்
முந்தைய ராத்திரியில் முளைத்த கூடாரத்தை சுருட்டிக்கொண்டு
படைதிரட்டி அணிவகுத்து முன்பாகச் செல்லும்
குதிரைமீது போகும் எம் மன்னன் நந்தன்
தெற்கு வாயிலை முற்றுகையிட
மன்னனுக்குப் பின்னால் செல்லும் காலாற்படையில்
அரை வயித்துக்கஞ்சியோடு ஓடும் என் அண்ணன்
ஈட்டியின் முட்டிக்கும் கீழே அளவு கண்டு
என்னை ஒதுக்கும் உங்கள் படைகளுக்கு
வெளியே தள்ளப்படும் நான்
நந்த மன்னனுக்கு மனுவோலை
எனக்கு ஏதுவாய் என் கைக்கு அடக்கமாய்
கூர்வாய்ந்த போர்க்கத்தி பழகப்பட்டே கிடக்கிறது
காலாற்படையின் கடைசி வரிசையில் சேர்த்துவிடு
கத்திபிடிக்க துடிக்கும் என் தம்பிக்கு
போரின் அனுபவங்களை நீ
ராத்திரி தங்கிய மண்மேட்டிலேயே
சொல்லித்தீரும் முடிவில்
அடுத்த படையுடன் அவனும் வருவான்

அது உளவியல் நோய் என்பதாக குறிப்பு



அடிக்கடி ஆறாம் அறிவு பழுதடையும்
அவனுக்கு புத்தி தெளிய கொஞ்ச நாட்களாகும்
நேற்று முளைத்ததல்ல அது
ஆயிரமாண்டு வருட கணக்கில் நீளும்
கட்டிகாக்கப்பட்ட வர்ணக்குழிகள்
சிக்கி மீள நாட்களாகும்
ஜென்ம புத்தி எதாலடித்தாலும் போகாது
அது உளவியல் நோய் என்பதாக சொல்லப்பட்டும்
குணப்படுத்திக்கொள்ள நோயாளி
நோயை உணரும்படி இல்லை
நோய்வாய்ப்பட்டு தெருமுனையில் சுத்தும்
அந்த நாயை கண்டால் பாவம் மேலெழும் எனக்கு
மருந்திடும் துடிப்பு
நோய் கண்டும் நாய் நாயாகவே சுத்துகிறது
கத்திப்பட்டது எம்மேல
கருஞ்சாந்துப்பட்டது எம்புள்ள மேல

நான் திமிறி எழும் வேளையில் நீ குனியக்கூடும்













ஏதுமறியாத என்னை ஏமாற்றவோ
ஏழ்ச்சிப்புழைக்கவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய்
திருவிழாவில் காணாதப்போன அப்பாவிக் குழந்தையாய்
முழிக்கும் என்னை ஏமாற்றுவதும் உனக்கு
கைவந்த ஏமாத்து வித்து வேலையாக இருக்கும்
ஒரு கணம் நான் சுதாரிக்கும்போது
தொங்குவதற்கு கயிரற்று மரமற்று
முருங்கமரத்தின் உச்சாங்கிளையில்
பூணூலில் தொங்கும் மரணம் உன்னால் நிகழ்த்தப்படக்கூடும்

என்னை நேசிக்க தெரிந்த தோழன் அவன்




வெறுமனே அறுபதை கடந்த எனக்கு
தோழா உன் பன்னூற்றாண்டு வயதின்
அறிவுத்தெம்பு எனக்குள்ளும் நீர்ச்சுனையாய்
அறைக்குள் அமர்ந்தவாறே உன் முகபடத்தை
நோக்கும் நொடியில் கசிகிறது
உயர்ந்த மலையின் அடிவாரத்தில்
உன் களப்பணியின் தொடக்கப்புள்ளி
உன் தம்மம் கேட்டு ஓலமிடும் மனிதர்கள்
தெருக்களில் திரிகிறார்கள்
மாநகராட்சியின் நாய் பிடிக்கும் வண்டி
கண்டுகொள்ளப்படாத மனிதர்கள்
தோழா
உன் முகவரியை தொலைத்து நெடுங்காலமாகிவிட்டது
தந்துவிட்டுப்போ என் தலைமுறையின் ரத்தச் சிதறல்களை
கடிதாசி போடுகிறேன்
அந்த கடிதாசியில் இடம்பெறப்போகும்
மிருகங்களின் பெயர்களில்
மனித முகங்கள் தெரியும்