அவர்களின் கரங்கள்
எங்களின் கழுத்தை நெறிக்கும்போது
நாங்கள் அன்பின் அரவணைப்பில்
அவர்களை ஆரத்தழுவுவது எப்படி?
அவர்கள்
எங்கள் சேரிகளின்
குடிசைகளை கொளுத்துகிறார்கள்
நான் கவிதை எழுதுகிறேன்.
அவர்களின்
அரச பயங்கரவாத துப்பாக்கிகள்
எங்களை நடுத்தெருவில்
சுட்டு வீழ்த்தியபோதும்
நான் கவிதை எழுதுகிறேன்.
சேரியின் உடல்களின் மீது
அவர்களின் வன்முறை வெறியாட்டம்
தொடர்கதையாகும்போதும்
நான் கவிதை எழுதுகிறேன்.
சாதிவெறி தலைக்கேறி வாள்(ல்) கொண்டு
எங்களை வெட்டி சாய்க்கிறார்கள்
அதிகாரம், ஆணவம்
மொத்தத்தையும் தூக்கியெறியும்
கழிப்பிடமாய்
இருந்துகொண்டிருக்கிறது சேரி
நான் கவிதை எழுதுகிறேன்.
ச்சீப் போடா ஜேபி... பைத்தியகாரா...
எத்தனை காலத்துக்கு
எழுதுவாய் கவிதைகளை
துப்பாக்கியின் முனையைவிட
பேனாவின் முனை கூர்மையானதென்று
எவன் சொன்னான்
சுட்டால் எதிரிகள் செத்துப்போகும்
பேனாத்துப்பாக்கிகளைக் காட்டுங்கள்
துப்பாக்கியை விடவும் பேனா வலிமையாகும்.

No comments:
Post a Comment