Monday, January 30, 2012

கோவணம் அரசியலானது…

இந்திய தேசத்தின்
வன்முறைவடிவம்
அமைதி, அஹிம்சை
உண்ணாவிரதப் போராட்டம் -
இது யாரையும்
குறிப்பாக உணர்த்தவில்லை
நேரடியாகத்தான் குறிக்கிறது.

வேட்டிக்கட்டியவன்
பேண்ட்சட்டை அணிந்தபோது
நாகரிக
வளர்ச்சிமாற்றமென்ற சமூகம்
கோட்டுசூட்டுப் போட்டவன்
கோவணம் கட்டியபோது
நாகரிக
இழிவென்று ஏன் கருதவில்லை?
அக்கியூஸ்டுகளை
மகாத்மாக்களாக ஆக்கியபோதுதான்
மகாத்மாக்களுக்கு சமாதிகட்டிவிட்டோம்…!

தரமான இலக்கியம்

நாங்கள்
எழுதும் இலக்கியங்களில்
எங்கள்
வலிகளை, வேதனைகளை
அழுகைகளை அவர்களுக்குப்
பிடித்தாற்போல் அப்படியே
பதிவு செய்ய வேண்டுமாம்…

எங்களின் கோபம், எரிச்சல்
எதிர்ப்பு
எதுவும் இடம்பெறக்கூடாதாம்
அதை.. அவர்கள்..
இலக்கியத் தரம், ரசணை
கோட்பாட்டு வடிவங்களின்
அலகுக்குள் வைத்து
எடைபோடுவார்களாம்.

உலகத் தரம் வாய்ந்த
இலக்கியங்களை உருவாக்குவது
எங்களின் நோக்கமல்ல என்பதை
முதலில் நீங்கள் புரிந்துகொள்ளாதது…

இது இலக்கியமாகவும் இருக்கலாம்
எதுவாகயிருப்பினும்
உங்கள் இரக்கத்தைக் கோரவில்லை
எங்கள்
எதிர்ப்பைத் தெரிவிக்கிறது…