Sunday, May 27, 2012

துப்பாக்கிச்சூடு கையறுநிலை





அபகரித்ததை
தொலைந்ததென்று விட்டிருக்கலாம்
வஞ்சகர்களுக்கு பஞ்சமி நிலத்தை
நாம் பிச்சையிட்டோம்
என்று இருந்திருக்கலாம்
நாய்களுக்கு உண்டைச்சோறு
உருட்டி வைத்தோம்
காக்கைகளுக்கு எச்சச் சோறு அல்ல
பந்திச்சோறு பரிமாறினோம்

நிலம் மயிறுக்குச் சமம்
நீள்குறியில் வடியும் வேர்வைக்கு
நிகர்
இழந்துவிட்ட உங்களை எப்படி
மீட்டெடுப்பேன்

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
யாம் ஏழுமலையும் உடையேம்
ஜான் தாமஸையும் உடையேம்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவிலும்
எம்நிலத்தை பிறர்கொண்டார்
எம் ஏழுமலையும் இலமே
ஜான்தாமசும் இலமே

Monday, May 7, 2012

ஒற்றைக் கவிதை போதும்


தேசியக் கவிகளை விடவும்
புரட்சிக் கவிகளைக் காட்டிலும்
நான் எழுதி புடிங்கிவிடவில்லை
என் ஒற்றைக் கவிதை போதும்
 உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்
நிம்மதியை சீர்குலைக்கும்
எரிச்சலை தூண்டும்
எல்லாவற்றிற்கும்மேல்
என்னை வேரறுக்க துடிப்பீர்கள்!


என்னை எழுதச் சொல்லி எவளும்
என் நாக்கில் சூலத்தால் குத்தவில்லை!
எழுதும் அருள்பெற எவளிடமிருந்தும்
 ஞானப்பாலோ முலைப்பாலோ
 நான் சப்பி குடிக்கவில்லை!
அடியேனுக்கு எவனும்
அடியெடுத்து கொடுக்கவில்லை!
ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதுகிறேன்
ஓராயிரம் கவிதைகளின்
ஒரு லட்சம் வரிகளை
தூக்கி குப்பையில் எறியுங்கள்
உன் முதுகெலும்பை முறித்துப்போட
என் ஒற்றைக் கவிதை போதும்!

 
என் ஒற்றைக் கவிதை
கடினமான வார்த்தைகளால் நிரம்பியதல்ல
வளைந்த  தன்மையோடு நெலியும்
கோழைத்தன்மையும் அதற்கில்லை
காற்றில் பறக்கும் மெல்லிய தூசு அது
காற்றின் திசைவேகத்தில்
அதன் வேகம் அதிகரிக்கும்
வீசும் திசையில்
நீ இருக்கக் கூடுமேயானால்
 கண்ணில் பட்டு உறுத்தும்
 ரயிலும் ரயிலடி பாதையும்
அதனதன் இருப்பில் இருக்கின்றன
 தண்டவாளத்தில் நீ தலை நீட்டும்போது
என் கவிதை
உன் கழுத்தை அறுத்துப்போடுவதில்
அதிர்ச்சி இல்லைதான்!  


யாரின் அச்சுறுத்தலையோ
மிரட்டல்களையோ கண்டு
பயங்கொள்ளாதது
திமிர் பிடித்த என் கவிதை! அதன்
 நரம்புகளும் நாடித்துடிப்பும்
இரத்த ஓட்டமும் எப்பொழுதும்
வீறுகொண்டு எழுந்து நிற்கும்!
கவிதை எவனுக்கேனும் அஞ்சிவிடுமேயானால்
அன்றுதான் அதன்
தண்டுவடம் முறிந்து
செத்து அனாதைப் பிணமாய்
பாடையில் போகும் நாள்!